Media

கார்த்தி ஈஸ்வரமூர்த்தி – ’தள்ளுபடிகளை விட, சிறந்த சேவையே வாடிக்கையாளர்களைக் கவரும்’

Published in YourStory

மிகப்பெரிய பண்டிகையான தீபாவளி வந்துவிட்டால், அவரவர் தங்கள் சொந்த ஊருக்கு போய் குடும்பத்தாருடன் கொண்டாடி மகிழ திட்டமிடுவதே வழக்கம். அந்த சமயத்தில், ரயில் மற்றும் பஸ் பயணத்தை தவிர்க்க முடியாது. ரயிலுக்கு டிக்கெட் முன்பதிப்பு பல மாதங்களுக்கு முன்பே முடிந்துவிடும் நிலையில், பெரும்பாலான மக்கள் ஊர்களுக்கு பஸ்களில் செல்லவே விருப்பப்படுவார்கள். இந்தச் சூழலில் ’டிக்கெட்கூஸ்’ ’TicketGoose’ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கார்த்தி ஈஸ்வரமூர்த்தியை சந்திக்க நேர்ந்தது. ‘டிக்கெட்கூஸ்’ ஆன்லைன் பஸ் டிக்கெட் புக்கிங் நிறுவனம் ஆகும். ஒரு நாளைக்கு 4,000 டிக்கெட்கள் விற்பனை என்று சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது, தற்போதும் அதே அளவில் இருக்கிறதே என்னும் கேள்வியுடன் உரையாடலை தொடங்கினோம். இது தவிர இந்தத் துறையின் வளர்ச்சி, விரிவாக்கம் உள்ளிட்ட பல தகவல்களை பகிர்ந்துகொண்டார். அவை உங்களுக்காக…

 

டிக்கெட் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் நிதி சார்ந்து நாங்கள் நிறைய மேம்பட்டிருக்கிறோம். சில ஆண்டுகளுக்கு இதே டிக்கெட்களை விற்பனை செய்வதற்கு, விளம்பரம், மார்கெட்டிங், தள்ளுபடி உள்ளிட்டவற்றை கொடுத்துதான் டிக்கெட் விற்பனை செய்ய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் தற்போது எந்தவிதமான இதர செலவுகள் செய்யாமலே இந்த விற்பனை நடந்து வருகிறது.   நடப்பு நிதி ஆண்டு முதல் நாங்கள் லாப பாதைக்கு திரும்பி இருக்கிறோம். ஆன்லைன் பஸ் புக்கிங் நிறுவனங்களை பொறுத்தவரை நாங்கள் மட்டுமே லாப பாதையை அடைந்துள்ளோம்,” என்கிறார் கார்த்தி. நாங்கள் தற்போது தள்ளுபடியை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டோம் என்றே சொல்லலாம். காரணம் வாடிக்கையாளர்கள் தள்ளுபடி கிடைக்கிறது என்பதற்காக பயணம் செய்வதில்லை. சென்னையில் இருந்து கோவைக்கு 500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை கூட பஸ் கட்டணம் இருக்கிறது. அனைத்து பஸ்களும் நிரம்பிதான் செல்கின்றன. அதாவது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நிறுவனம் மட்டும்தான் தேவை. சமயங்களில் நாங்கள் 10 சதவீத தள்ளுபடி வழங்குவது உண்டு, ஆனால் அதனை மிகச்சில வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். தவிர தள்ளுபடியை தொடர்ந்து கொடுக்கவும் முடியாது. எதாவது ஒரு நாளில் தள்ளுபடியை நிறுத்தித்தான் ஆகவேண்டும். அதனால் தள்ளுபடி இல்லாமல் எப்படியெல்லாம் லாபப் பாதைக்கு திரும்ப முடியுமோ அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். வளரும் சந்தை இந்தியாவில் நகர மயமாக்கால் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 52 சதவீத மக்கள் நகரங்களில் உள்ளனர். பெரு நகரங்கள் மட்டுமல்லாமல் சிறு நகரங்களும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. தவிர நகரங்களில்தான் வேலை வாய்ப்பு இருக்கிறது. அதனால் நகரங்களுக்கு வரும் மக்கள் விடுமுறை மற்றும் பண்டிகை தினங்களில் சொந்த ஊருக்குச் சென்றாக வேண்டும். விமானம், ரயில், பஸ் ஆகியவையே முக்கியமான போக்குவரத்தாக நமக்கு உள்ளது. விமானம் என்பது இரு பெரு நகரங்களை மட்டுமே இணைக்கும். ரயில் பயணம் அனைத்து ஊர்களையும் இணைக்காது. தவிர ரயில்களின் எண்ணிக்கையை உயர்த்துவதோ அல்லது புதிய நகரங்களை இணைப்பதோ கடினமாகும். ஆனால் பஸ் என்பது அப்படியல்ல. எளிதாக புதிய பேருந்துகளை எந்த ஊருக்கும் அறிமுகப்படுத்தி இணைக்க முடியும். அதனால் பஸ்களுக்கானத் தேவை இருந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீத புதிய பஸ்கள் சந்தைக்கு வருகின்றன, என்றார். லாபமான தொழில்! பலரும் பஸ் நிறுவனத்தை நடத்துவதில் லாபம் இல்லை என்றே நினைக்கிறார்கள். பஸ்ஸில் தோற்றவர்கள் என்றால் சரியான முறையில் வாடிக்கையாளர்களை நடத்தாதது, நேரம் தவறுதல், ஊழியர்களின் தன்மை, நிதி நிலைமையை சரியாக கவனிக்காதது போன்ற காரணங்களால் மட்டுமே தோல்வி அடைந்திருப்பார்கள். கோவையில் காண்டி டிராவல்ஸ் என்னும் நிறுவனம் இருக்கிறது. ஒருவாரத்துக்கு முன்பு முன்பதிவு செய்தால் இந்த பஸ்ஸில் இடம் கிடைக்கும். தவிர தமிழகத்தில் உள்ள எஸ்.ஆர்.எம்., பர்வீன் உள்ளிட்ட பல பஸ் நிறுவனங்கள் புதிய பஸ்களை இணைந்துக் கொண்டே இருக்கின்றன. தற்போது போட்டி அதிகரித்திருப்பதால் சேவை மூலமாக மட்டுமே வாடிக்கையாளர்களை தக்க வைக்க முடியும். புரிந்துகொள்ளும் வாடிக்கையாளர் இந்தியர்களைப் போல சிக்கலை புரிந்து கொள்ளும் வாடிக்கையாளர் வேறு எங்கும் இல்லை என்றே சொல்ல வேண்டும். பஸ் தொழிலை பொறுத்தவரை நேரம் முக்கியப் பிரச்சினை. ஒரு சில நிமிட கால தாமதத்தை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் மணிக்கான தாமதத்தைப் பொறுத்துகொள்ள மாட்டார்கள். இந்திய வாடிக்கையாளர்கள், கால தாமதத்தை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் இவ்வளவு நேரம் பஸ் தாமதமாகும் என்பதை முன்கூட்டியே சொல்ல வேண்டும் என நினைப்பார்கள். இது அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். அதேபோல வாடிக்கையாளர் சேவையால்தான் நாங்கள் வளர்கிறோம் என நம்புகிறோம். வாடிக்கையாளர் புக்கிங் செய்து பணம் வந்தவுடம் அந்த பரிவர்த்தனை முடிந்தது என நாங்கள் நினைப்பதில்லை. அதன் பிறகுதான் சேவையே தொடங்குகிறது என நினைக்கிறோம். பஸ் ரத்து செய்யப்படும் சமயங்களில் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுப்பதால் பிரச்சினையை தீர்க்க முடியாது. அவர்கள் பணத்தை திரும்ப வாங்குவதற்காக நம்மிடம் பதிவு செய்யவில்லை. அவர்களின் பயணத்துக்கு திருமணம், வேலை என பல காரணங்கள் இருக்கலாம். அதனால் வாடிக்கையாளர்களுக்கு பணம் திரும்ப கிடைப்பது முக்கியமில்லை. செல்ல வேண்டிய இடத்துக்கு செல்வதுதான் முக்கியமானது என்பதால் மாற்று ஏற்பாடு செய்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு பண்டிகை நாளில் இது போல ஒரு பேருந்து ரத்து செய்யப்பட்டது. அப்போது அவர்கள் எங்களுடைய வாடிக்கையாளர் தொடர்பு மையத்தை அணுகிய போது, அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுத்தோம். சமயங்களில் கூடுதல் டிக்கெட் இருந்தால் கூட அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். சில சமயங்களில் ரூ.500 வரைக்கும் கூட வாடிக்கையாளர்களுக்காக செலவு செய்யத் தயாராகவே இருக்கிறோம், என்கிறார் கார்த்தி ஈஸ்வரமூர்த்தி. சந்தை பங்களிப்பு தென் இந்தியா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இந்தியாவில் பஸ் பயண முன்பதிவு 20 சதவீதம் மட்டுமே நடக்கிறது. வடக்கு மாநிலங்களில் இந்த சதவீதம் இன்னும் மிகக் குறைவு. அதேபோல எங்களிடம் வரும் வாடிக்கையாளர்களில் 65 சதவீதத்தினர் முதல் முறையாக இணையதளம் மூலம் முன்பதிவு செய்கிறார்கள். இதற்குக் காரணம் டிஜிட்டல் மூலம் புது வாடிக்கையாளர்களை, இளைஞர்களை நோக்கிச் செல்கிறோம். எங்களுடைய புராடக்ட்களில் எந்த புதுமையும் பெரிய அளவில் செய்ய முடியாது. நாங்கள் விற்பதும் டிக்கெட்தான் மற்ற நிறுவனங்கள் விற்பதும் டிக்கெட்தான். அதனால் புதிய வாடிக்கையாளர்களைக் கவர்வது, செலவுகளை குறைத்து லாபத்தை அதிகரிப்பது, தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்துவதன் மூலமே அடுத்தக் கட்டத்துக்கு செல்ல முடியும். 40,000 டிக்கெட்டை நஷ்டத்தில் விற்பதை விட 4000 டிக்கெட்டை லாபத்தில் விற்பது மேல். அடுத்து என்ன? ஒரளவு டிக்கெட் சந்தை சீராகி விட்டது. அடுத்த கட்டமாக ஹோட்டல் அறைகள் மற்றும் டாக்ஸி போன்றவற்றில் ஈடுபடத் தொடங்கி இருக்கிறோம். டாக்ஸி என்றால் இரு நகரங்களுக்குள் இடையேயான போக்குவரத்தில் கவனம் செலுத்துகிறோம். இந்த பிரிவில் தற்போதுதான் வருமானம் ஈட்டத் தொடங்கி இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் விமான டிக்கெட் பிரிவில் கவனம் செலுத்த இருக்கிறோம் என கார்த்தி ஈஸ்வர மூர்த்தி கூறினார்.

Read more at: https://yourstory.com/tamil/best-customer-service-secret-of-business-online-bus-ticket-ticketgoose